Our Feeds


Sunday, December 21, 2025

SHAHNI RAMEES

மாகாணத் தேர்தலை விரைந்து நடாத்த NPP அரசுக்கு அழுத்தமளியுங்கள்! - மோடிக்கு கடிதம்

 

தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்கு தமிழ்த்தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


இக்கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தளங்களிலும் இந்தியா பகிரங்கமாக வலியுறுத்திவரும் நிலையில், அவ்வழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்குமாறு கோரவிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  

அதேபோன்று தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும் அதிகாரப்பகிர்வானது அர்த்தமுள்ளதாக அமையவேண்டியதன் அவசியம் குறித்தும் அக்கடிதத்தில் உள்வாங்கப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக குறித்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் ஜெய்சங்கரின் இலங்கைக்கான திடீர் பயண ஒழுங்கின் காரணமாக அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »