Our Feeds


Friday, December 26, 2025

SHAHNI RAMEES

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 9 மாடி கட்டிட காணியினை கையகப்படுத்த நடவடிக்கை!


 றிப்தி அலி

கொழும்பு – 10 இலுள்ள முஸ்லிம் சமய

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சொந்தமான 9 மாடிகளைக் கொண்ட கட்டிடம் அமையப் பெற்றுள்ள காணியினை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்ற விடயம் தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதேச செயலாளருக்கு புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எம். நாலிகா பீ குனரத்ன அண்மையில் எழுதிய கடிதத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் திணைக்களத்தின் கீழுள்ள இந்தக் காணியினை அமைச்சிற்கு மாற்றுவதற்காக சிரேஷ்ட நில அளவையாளரினால் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின் முன்னேற்றத்தை சமர்ப்பிக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சரவையினால் 2021.03.16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்  பிரகாரமே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது பல இடங்களில் நடாத்திச் செல்கின்றமையினால் அமைச்சையும் இந்த நிறுவனங்களையும் ஒரே கட்டடத்தில் தாபிக்கும் தேவையின் பொருட்டு கொழும்பு – 10, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டடம் மற்றும் அது அமைந்துள்ள காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் அதன் பின்னர் நிர்மாணிப்பு பணிகளை பூர்த்தி செய்து அமைச்சையும் அதன் கீழான சகல நிறுவனங்களையும் இந்த கட்டடத்தில் தாபிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் அப்போதைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியூ. பிரின்ஸ் சேனாதிரவை தொடர்புகொண்டு வினவிய போது, அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

இதேவேளை, குறித்த விடயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடைய அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்டது எனவும் இந்தப் பணியினை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

இந்த விடயம் அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடவுள்ளேன் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இந்தக் காணி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக அக்காலப் பகுதியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த லக்ஷமன் ஜயகொடி, சிறிமத் அதுலத்முதலி, எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் ஏ.எச்.எம். பௌசி போன்றோர் கடும்பாடுபட்டுள்ளனர்.

மீண்டும் இக்காணி புகையிரத திணைக்களத்திற்கு மாற்றப்பட்டு தற்போது கொழும்பு பிரதேச செயலாளரின் கீழ் காணப்படுகின்றது. இக்காணியில் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் 2006ஆம் ஆண்டு அப்போதைய சமய விவகார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் அடிக்கல் நடப்பட்டது.

இந்த கட்டிடத் தொகுதியின் முதல் மூன்று மாடிகளுக்கான நிதி சவூதி நிதியத்தினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத இந்த கட்டிடத் தொகுதி 2017ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »