(லியோ நிரோஷ தர்ஷன்)
'டித்வா' புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் உட்பட தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மொத்தமாக 950 மெட்ரிக் தொன் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 950 மெட்ரிக் டொன் நிவாரணப் பொதிகளில் பருப்பு, சீனி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெருமளவில் உள்ளடங்குகின்றன. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 துவாய்கள் (TOWELS) 5,000 சேலைகள், 5,000 வேட்டிகள், 10,000 படுக்கை விரிப்புகள் மற்றும் 1,000 தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்கள் (TARPAULIN) போன்ற அத்தியாவசியப் பொருட்களும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன.
'இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனைகளின் பிரகாரம், பேரிடர் இடம்பெற்ற மறுநாளே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாகவே மிக விரைவில் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிந்தது. விரைவில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் 'தித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் பெரும் உயிரிழப்புகளும், உடைமைகள் சேதங்களும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதேவேளை, மத்திய அரசின் 'சாகர் பந்து நடவடிக்கை' மூலம் இந்தியா ஏற்கனவே கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படைகள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், பல டொன் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவுஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா, மாலைதீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி இலங்கையின் மீட்சிக்குத் தோள் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
