Our Feeds


Sunday, December 7, 2025

Zameera

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முரண்பாடான இந்த விடயத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக கட்சித் தலைவர்களை அழைத்து முடிவை எடுக்க வேண்டும். இப்போது அரச அதிகாரம் ஜனாதிபதி அலுவலகத்தாலோ அல்லது பிரதமர் அலுவலகத்தாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழுவால் தான் தற்போது நாட்டின் நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பாராளுமன்ற அதிகாரத்தை இழிவுப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை தீத்வா சூறாவளி அழிவுகளில் இருந்து மீள அரசாங்கத்திற்கு அனுபவம் குறைவாகவே உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை மற்றும் புனரமைப்புக்கான கண்காணிப்புக் குழுவை பாராளுமன்றத்தால் நியமிப்பது பொருத்தமானது. அதன் தலைமைப் பதவியை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வகிக்க வேண்டும்.

அத்துடன் புனரமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்களை கொண்ட ஒரு சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு நாட்டின் நான்கு மகாநாயக்க தேரர்கள் தலைமை தாங்கினால், அது ஒரு பெரிய பலமாக இருக்கும். ஏனைய பிரதான மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகும்.

பேரிடருக்குப் பிறகு, 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் பணிகளை ஒப்படைக்கப்பட்ட அனைத்துத் திணைக்களங்கள், அரச பிரிவுகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் செயலற்றவர்களாகி விட்டனர். பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, உதவிகளை வழங்குவதில் அரசியல்மயமாக்கலைச் செய்ய முயற்சிக்கிறது. மற்றொரு சமாந்தரமான நிவாரண நிதியையும் நிறுவியும் உள்ளது. இந்த அழிவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் ஒரு வியூகம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். இன்னும் யார் இறந்தார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று கூட முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »