( செ.சுபதர்ஷனி)
சுகாதாரத்துறையினரின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் விசேட டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இருதய தொழில்நுட்பம் தொடர்பான உயர் டிப்ளோமா பாடநெறியை (2025) வெற்றிகரமாக நிறைவு செய்த 351 இருதய வரைபு தொழில்நுட்பவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஈசிஜி, உடற்பயிற்சி ஈசிஜி, ஹோல்டர் கண்காணிப்பு, இதய வடிகுழாய் பரிசோதனை, இதயத் துடிப்பு முடுக்கி (பேஸ்மேக்கர்) போன்ற பரிசோதனைகள் மற்றும் மருந்தியல் அழுத்தப் பரிசோதனை, நடமாடும் இரத்த அழுத்தக் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் இருதய வரைபு தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளர் பராமரிப்புக்குத் தேவையான பங்களிப்பை வழங்குகின்றனர். தற்போது சுமார் 500 தொழில்நுட்பவியலாளர்கள் இத்துறையில் பணிப்புரிந்து வருகின்றனர். சுகாதாரத்துறையினரின் தொடர்ச்சியான தொழில்சார் நிபுணத்துவத்திற்காக சுகாதார அமைச்சினால் இவ்வாறான விசேட பாடநெறிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் மூலம் சுகாதாரச் சேவையின் தரத்தை உயர்வதுடன், உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் மனப்பாங்கு விருத்திக்கும் இது பெரும் துணையாக அமையும். இலங்கையின் இலவச சுகாதாரச் சேவையில் துணை மருத்துவ சேவைக்கு சொந்தமான இந்தத் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவை நவீனமயப்படுத்த சுகாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. சுகாதாரச் சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக சர்வதேச தரத்திற்கு அமைய இவ்வாறான பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு வினைத்திறனான மற்றும் சிறந்த சேவையை வழங்க முடியும்.
எதிர்காலத்தில் இப்பாடநெறி ஒரு பட்டப்படிப்பாக மாற்றப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இப்பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்த இதய நோய் விசேட வைத்தியர்கள், துறைசார் நிபுணர்கள், பயிற்சி மேற்பார்வையாளர்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளின் ஊழியர்கள் அனைவருக்கும் சுகாதார அமைச்சர் என்ற வகையில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
