(எம்.ஆர்.எம்.வசீம்)
தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை, அவரை பணி நீக்கம் செய்யும் அளவுக்கு பாரதூரமான விடயமாக கருத முடியாது. அதனால் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என நாம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவிலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் பெல்லன பணி நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே அறிந்துகொண்டேன். அவருக்கு வழங்கி இருக்கும் பணிநீக்கம் தொடர்பான கடிதத்தில், பொறுப்புவாய்ந்த பதவி வகிக்கும் அரச வைத்திய அதிகாரியாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக நாட்டுக்குள் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்படும் வகையிலும் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு, அனுமதியில்லாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய சம்பவமாக நான் காண்பதில்லை. நானும் பொது நிர்வாக அமைச்சராக செயற்பட்டிருக்கிறேன். இது பணி நீக்கம் செய்யப்படுவதற்கோ வெளிநாடு செல்வதை தடுப்பதற்கோ பொருத்தமான நடவடிக்கையல்ல. அதனால் அவர் பாரிய எஞ்சிய பணத்துடன் மீண்டும் சேவைக்கு திரும்புவார்.
அவரின் பணி நீக்கம் தொடர்பில் எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரின் சுகாதார நிலைமை தொடர்பில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். உலகில் அரச தலைவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி்க்கப்பட்டால், உதாரணமாக கொரியா,இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் அந்த வைத்தியசாலை பணிப்பாளர்கள் அல்லது வைத்திய தலைமை அதிகாரி அது தொடர்பாக தகவல்களை வெளியிடுவார்கள். அது முக்கியமாகும்.
அதனால் சர்வதேச செய்தி சேவைகளில் இவ்வாறான நிலைமைகள் தொடர்பான அறிவிப்புகளை மீண்டுமொருமுறை பார்த்தால் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடிந்திருக்கும் என்றார்.
