Our Feeds


Saturday, December 13, 2025

Zameera

அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்


 "ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் போது, களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவுவதை விடுத்து, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துகொண்டிருப்பதைத் தவிர்த்து மக்களுக்காகச் சேவை செய்ய முன்வாருங்கள்" என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

 

கடந்த வியாழக்கிழமை (11) கொத்மலை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சேதமடைந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 

இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை பிரதேச மக்கள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர். 

 

நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதி மண்சரிவினால் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் புகையிரதப் பாதையின் சுமார் 200 மீற்றர் தூரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைச் சீர்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இன்னும் மூன்று தினங்களில் இவ்வீதி போக்குவரத்துக்காகத் திறக்கப்படும். 

 

 வீதிச் சேதத்தினால் மக்கள் சுமார் 750 மீற்றர் தூரம் நடந்து சென்றே பேருந்துகளைப் பிடிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. 

 

கடந்த 25 முதல் 50 ஆண்டுகளாக மக்கள் தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளனர். ஆறுகள் மற்றும் கால்வாய்களை மறித்து நிர்மாணங்களை மேற்கொண்டால் பாரிய நட்டஈடுகளைச் செலுத்த வேண்டியேற்படும். எனவே, இனிவரும் காலங்களில் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதே எமது முக்கிய நோக்கம்" என்றார்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »