Our Feeds


Thursday, December 4, 2025

Zameera

HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை


 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது.


ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்.


பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.




மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »