கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி, மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அவரது கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் விடுத்துள்ள கடிதத்தில், கொழும்பு மாநகரசபை வரவு செலவுத் திட்ட முன்மொழிவை எதிர்த்து வாக்களிக்குமாறு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணிப்புரை வழங்கியிருந்த போதிலும், புஹாரி அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது இந்தச் செயல் “கட்சி ஒழுக்கத்தை மீறிய பாரிய விதிமீறல்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விபரித்துள்ளது.
மேலும், தனது உறுப்புரிமையை நீக்குவது உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஏன் எடுக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வார காலத்திற்குள் சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் விளக்கமளிக்குமாறும் அக்கடிதத்தில் புஹாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில், மேலதிக அறிவித்தல் ஏதுமின்றி அடுத்தகட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
