(நா.தனுஜா)
இலங்கையில் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை விரைந்து மீட்டெடுப்பதற்கும், உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு சர்வதேச சமூகத்திடம் 16.5 மில்லியன் டொலர் நிதியுதவியைக் கோரியுள்ளது.
நாட்டின் அண்மைய வரலாற்றில் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்திய 'தித்வா' சூறாவளியினால் சுமார் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுப்பாதுகாப்பு சார்ந்த உதவிகள், விவசாயம் மற்றும் போசணை உதவிகள் என்பன தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
இப்பேரனர்த்தத்தினால் 129,000 ஹெக்டேயர்களுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்திருப்பதுடன், விவசாயத்தில் ஈடுபட்டுவந்த 227,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 37,000 க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் எருமை மாடுகள், சுமார் 16,000 ஆடுகள் உயிரிழந்தும், காணாமல்போயும் உள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அனர்த்தத்தினால் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 66 – 69 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்டுள்ள மத்திய, கிழக்கு, வடமத்திய, வடகிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணஙற்களைச்சேர்ந்த 256,000 குடும்பங்களுக்கு (1.03 மில்லியன் மக்கள்) அவசியமான உடனடி உணவு மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு 16.5 மில்லியன் டொலர் நிதி தேவை எனவும், அதனை நன்கொடையாக வழங்க முன்வருமாறும் ரோமில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகம் சர்வதேச சமூகத்துக்கு அமைப்புவிடுத்துள்ளது.
