Our Feeds


Wednesday, January 7, 2026

Zameera

தரம் 6க்கான ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன


 தரம் 6க்கான ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யார் தவறிழைத்தது, அதன் நோக்கம் என்னவென்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும். இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.




பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2025.11.28ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



அவசரகால சட்டம் எக்காரணங்களுக்காகவும் தவறாக பயன்படுத்தப்படாது. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.



இதேவேளை, 06ஆம் தர ஆங்கிலப் பாடத்தின் ஒரு தொகுதியில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் பற்றி தற்போது பேசப்படுகிறது. தேசிய கல்வி நிறுவனம் பிறிதொரு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சால் அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது. நிறுவனத்தின் ஆணைக்குழு ஊடாக இந்தப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்படுகிறது.



இந்தச் சம்பவம் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. இடம்பெற்ற தவறு தொடர்பில் முறையாக விசாரிக்கப்படுகிறது. யார் தவறு இழைத்தது, அதன் நோக்கம் என்ன என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும்.



இந்தப் பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. ஆகவே இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »