பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
"இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.
