Our Feeds


Friday, February 27, 2026

Zameera

செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது - ராஜித சேனாரத்ன


 (எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. ஏனைய சம்பவங்களைப் போன்று இதுவும் வெறும் கண்காட்சியாக இருந்தால் அது பிரயோசனமற்றது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

26ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுரேஸ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எவ்வாறான சாட்சியங்கள் உள்ளன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் எமது ஆட்சியின் போது இந்த தாக்குல்களின் பின்னணியில் பிரிதொரு குழு இருப்பதாக நாமும் சந்தேகம் வெளியிட்டிருந்தோம். மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்டதிலிருந்தே இந்த தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றைய தினமே அந்த சம்பவத்தை விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைத்து கூறப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அன்று நாம் அதனை நம்பவில்லை. விடுதலைப் புலிகளால் அவ்வாறான ஆயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான இயலுமையும் தற்போது இல்லை. அந்த வகையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அது சஹரான் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட கொலைகள் என்பது தெரிய வந்தது. எனவே ஆரம்பத்தில் இராணுவத்தினர் எவ்வாறு இந்த கொலைகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவை என்ற முடிவுக்கு வந்தனர்?

ஏனைய சம்பவங்களைப் போன்று இதுவும் வெறும் கண்காட்சியாக இருந்தால் அது பிரயோசனமற்றது. செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. எனவே சரியான விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். நிலக்கரி பிரச்சினையை மூடி மறைப்பதற்காக இந்த கைது பயன்படுத்தப்படக் கூடாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »