இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சுமத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 5900 - 6150 கிலோ கலரிக்கு இடையில் காணப்பட்டதால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது கப்பலால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 288.5 மில்லியனாகும். ஆனால் தண்டப்பணமாக 135.1 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மூன்றாவது கப்பலால் 1047.4 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 150.3 மில்லியன் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
நான்காவது கப்பலால் 865 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 107.1 மில்லியன் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. முதல் நான்கு கப்பல்களால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது.
தண்டப்பணத்துக்கும் நஷ்டத்துக்குமான வேறுபாட்டை மக்கள் மீது சுமத்துவதற்கே தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி நிலக்கரியின் தரம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வக அறிக்கை தொடர்பிலும் எமக்கு சந்தேகம் எழுகிறது. அவை போலியான அறிக்கைகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றோம். எமது சந்தேகங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.
