2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் மாத்திரம் 12,731 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியப் பிரஜைகளே அதிகளவானோர் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 70,880 எனப் பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரித்தானி பிரஜைகள் 44,053 பேரும், ரஷ்ய பிரஜைகள் 36,949 பேரும், ஜெர்மானிய பிரஜைகள் 28,332 பேரும், சீன பிரஜைகள் 22,309 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
