தலங்கம - அக்குரேகொடவில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி- அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார், கண்டுபிடிக்கப்பட்டபோது தீப்பிடித்திருந்ததாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார், குறித்த பகுதியில் கைவிடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கார் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலைக்கு, தற்போது வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் 'கரந்தெனிய சுத்தா' என்று அமைக்கப்படும் ஜெயலத் சில்வா, காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த சட்டத்தரணி, 'கரந்தெனிய சுத்தா' சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் அவரது எதிரியான 'லொக்கு பெட்டி' எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கரந்தெனிய சுத்தா பற்றிய தகவல்களை, உயிரிழந்த சட்டத்தரணி லொக்கு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.
