Our Feeds


Sunday, February 15, 2026

Zameera

அனுமதி இன்றி முதியோர் இல்லங்கள் நடத்த முடியாது


 முதியோர் இல்லங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு முதியோர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கமைய, தேசிய முதியோர் செயலகத்தின் முதியோருக்கான தேசிய சபையின் பரிந்துரை இன்றி எந்தவொரு முதியோர் இல்லத்தையும் கொண்டு நடத்த முடியாதவாறு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்தார்.


ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களைத் தரிக்கவைத்து பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு இதுவரை 136 முதியோர் இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.


முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது தெளிவான ஏற்பாடுகள் இல்லாததால், அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கும், அதனூடாக முதியோர் இல்லப் பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான புதிய விதிகள் மற்றும் கட்டளைகளை இந்த ஆண்டில் வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.


தற்போது முதியோர் இல்லத்தைப் பதிவு செய்வதற்கான அடிப்படை வழிகாட்டிக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முதியோர் இல்லங்களை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய 09 முக்கிய அளவுகோல்களை முன்வைத்தார். அவை வருமாறு:


நிலப்பரப்பு: கிராமப்புறங்களில் முதியோர் இல்லங்களை அமைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இருக்க வேண்டும். அரை நகர்ப்புற அல்லது நகர்ப்புறங்களில் அமைப்பதாக இருந்தால் 40 பேர்சஸிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.


வெளிப்புற நடவடிக்கைகள்: தங்கியிருக்கும் முதியோர்களின் வெளிப்புற செயற்பாடுகளுக்காக மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.


அனுமதி: முதியோர் இல்லத்தை அமைப்பதற்கு பிரதேச சபை/ மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.


ஆராய்ச்சி நிறுவனப் பரிந்துரை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரையைப் பெற வேண்டும்.


வாடகை ஒப்பந்தம்: குத்தகை அடிப்படையில் நடத்தப்படுவதாயின், அந்த குத்தகை ஒப்பந்தம் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் நீண்டகால ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.


தரக்கட்டுப்பாடு: முதியோர் இல்லத்தின் அனைத்து கட்டுமானங்களும் "முதியோர் பராமரிப்பு இல்ல" தரநிலைகளுக்கு இணங்க அமைதல் வேண்டும்.


பசுமைக் கட்டடக் கோட்பாடு: பசுமைக் கட்டடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய நிலப்பரப்பு மற்றும் கட்டிடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.


மாற்று சக்தி: முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.


இடமாற்றம்: தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலோ அல்லது புதிய பகுதிகளை இணைத்தாலோ, அது குறித்து பிரதேச செயலாளர் ஊடாக தேசிய முதியோர் செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.


முதியோர் சட்டத்தைத் திருத்தி, இல்லங்களில் இடம்பெறும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுகாதார அமைச்சு, முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாகாண சபைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை நடத்துபவர்களின் கருத்துக்கள் இந்தச் சட்டவாக்கச் செயன்முறையில் உள்வாங்கப்படும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


முதியோர் செயலகப் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:


"சமூக சேவை என்ற போர்வையில் பல்வேறு அறக்கட்டளைகளை உருவாக்கி சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்."


"எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி 456 முதியோர் இல்லங்கள் உள்ளன. பதிவாகாத இல்லங்கள் மேலும் 100 வரை இருக்கலாம். இவற்றில் மொத்தமாக சுமார் 15,000 முதியோர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் தாயாரே அதிகளவில் உள்ளனர். இவை தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இல்லங்கள் தொடர்பில் விதிகள் உள்ளன.


ஆனால், பதிவு செய்யப்படாவிட்டால் விதிக்கப்பட வேண்டிய தண்டனை என்ன என்பது இதுவரை தெளிவாக இல்லை. எனவே, புதிய திருத்தத்தில் அந்தப் பகுதிகளைச் சரியாக உள்வாங்குவோம். சில முதியோர் இல்லங்களில் மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகிறது. பாவம் அந்த அப்பாவி மக்கள்; சமூக சேவை என்று கூறிக்கொண்டு பல்வேறு அமைப்புக்களை உருவாக்கிச் சிலர் பெரியளவில் மோசடி செய்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »