Our Feeds


Wednesday, February 4, 2026

Zameera

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்




 பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 


இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் டெண்டர் முறைமைக்கு அமையவே செயல்பட்டதாகக் கூறினார். 

நிலக்கரி இறக்குமதியின் போது டெண்டர் முறைமையையோ அல்லது விவரக்குறிப்பு முறைமைகளையோ மாற்றவில்லை என்றும், நிலக்கரியின் தரம் குறித்து விசேட நிலைமை ஏதேனும் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் டெண்டர்/கொள்முதல் செயன்முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், நிலக்கரி விநியோகம் அல்லது அதன் தரம் தொடர்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு அமைவான முறைமை ஒன்று டெண்டர் செயன்முறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமையவே செயல்பட்டுள்ளதால் தவறான கூற்றுக்களை வெளியிட வேண்டாம் எனத் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மேலும் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

"எந்தவித டெண்டர் நடைமுறையும் இன்றி, முன்னைய ஆட்சியின் உறவுமுறைத் தொடர்புகளைக் கொண்ட நிறுவனம் ஒன்று அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிலக்கரி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. இம்முறை அவர்களும் டெண்டரில் கலந்துகொண்ட போதிலும், அவர்களுக்கு டெண்டரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் அவர்களுக்காகவே பேசுகின்றனர். 

அவசரத் தேவை ஒன்று ஏற்பட்டால் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அவ்வாறு கொள்வனவு செய்தாலும் அதனால் நட்டம் ஏற்படாது. தற்போது 6 கப்பல் தொகுதிகள் துறைமுகத்திற்கு வந்துள்ளன. 

முதலாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளில் சில மாற்றங்கள் இருந்தாலும், ஏனையவை தேவையான மட்டத்தில் உள்ளன எனக் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »