மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் தேசிய பாதுகாப்பு நிபுணரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்நாள் முழுவதையும் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக அர்ப்பணித்த அவர் அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியகம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றியவர். மூன்று தசாப்தங்களாக ஐந்து அரசாங்கங்களின் கீழ் தேசிய பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு சர்வதேச புலனாய்வு சமூகத்தால் மதிக்கப்படுபவை. எவராலும் களங்கப்படுத்த முடியாத ஒரு தூய்மையான வரலாற்றை அவர் கொண்டுள்ளார்.
அவ்வாறான நிலையில், 2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஜெனரல் சலேவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறித்த விடயத்தில் அவர் முற்றிலும் நிரபராதியாவார். அத்தாக்குதல் நடந்த காலப்பகுதியில் அவர் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிவிட்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார். எனவே தற்போதைய கைது நடவடிக்கையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது.
ஜெனரல் சலேயின் கைது நடவடிக்கையை இரண்டு தரப்பினர் கொண்டாடுகிறார்கள், ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகளை நிகழ்த்திய பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலாவது தரப்பினராக உள்ளது. அடுத்ததாக, இலங்கை பாதுகாப்புப் படைகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சதித் திட்டக் கதைகளைப் பரப்பும் அரசியல் தீவிரவாதிகளாவர்.
இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சர்வதேச சமூகத்திற்கான பாடங்கள் என்ற நூலின் ஆசிரியராக இத்தாக்குதல் குறித்து நான் மிக நுணுக்கமாக ஆய்வினை வெளியிட்டுள்ளேன். எனது கண்டுபிடிப்புகள் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு, அவுஸ்திரேலிய மத்திய பொலிஸ், ஸ்கொட்லாந்து யார்ட் மற்றும் இன்டர்போல் போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன.
இலங்கைத் தலைவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் விளையாடக்கூடாது. தேசத்தைப் பாதுகாப்பதில் கட்சி பேதமற்ற அணுகுமுறையே அவசியம். அதுவே முதிர்ச்சியான நிர்வாகமாகும். மாறாக ஜெனரல் சாலேயைக் கைது செய்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதில் ஏற்பட்ட அலட்சியம் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.
