Our Feeds


Tuesday, February 3, 2026

Zameera

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு


 பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

2024 இல் 37 ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சயாதீன அரசியலமைப்பு நிறுவனமாக 'தேசிய பெண்கள் ஆணைக்குழு' நிறுவப்பட்டது. எவ்வாறாயினும், அந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட நான்கு மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் அதன் முதலாவது தலைவர் கலாநிதி ரமணி ஐயசுந்தர தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது விலகலுக்கு முக்கிய காரணமாக ஆணைக்குழுவிற்கு சுயாதீனமாக செயல்படுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், சுதந்திரமான அலுவலக வசதிகள் மற்றும் முறையான பணியாளர்கள் இல்லாமை போன்றன அமைந்து காணப்படுவதாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. 

அவ்வாறே, தொடர்புடைய அமைச்சினால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்குப் பாதகம் விளைவிக்கும் விதத்தில் நிர்வாக தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆணைக்குழுவை அமைச்சின் கீழ் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (CEDAW), நிலைபேறு இலக்குகளில் ஐந்தாவது இலக்கு போலவே, சட்டத்தின் பிரிவு 4, 5 மற்றும் 6 இன் கீழ் நமது நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய நிதியங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல பொறுப்புகளை முன்னெடுக்க வேண்டியுள்ள தருணத்தில், பாரிஸ் கொள்கைகளுக்கு எதிராகவும் சென்று பெண்கள் ஆணைக்குழு தற்சமயம் துரதிஷ்ட நிலையை எட்டியுள்ளது. 

எனவே, பின்வரும் கேள்விகளை நான் முன்வைப்பதோடு, அதற்கான சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். 

1. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பொறுப்புகள் யாவை? அந்த ஆணைக்குழுவின் முதலாவது தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி குறுகிய காலத்திற்குள் அந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்வைத்த குறிப்பிட்ட காரணங்கள் என்ன? 

2. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவிற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் எவ்வளவு? 

3. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு செயல்படுவதற்குத் தேவையான சுதந்திரமான அலுவலக வசதிகள் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனரா? இல்லையெனில், இந்த ஆணைக்குழுவை அமைச்சுடன் இணைத்து அதன் பணியாளர்களைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அவ்வாறு செய்வதன் மூலம் ஆணைக்குழுவின் அரசியலமைப்புச்சார் சுயாதீனத்தில் அரசாங்கம் அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றதா? 

அவ்வாறே, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஒருவர் இதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறே குறைநிரப்பு பிரேரணையொன்றை கொண்டு வந்து இந்த ஆணைக்குழுவிற்குத் தேவையான அலுவலக பணியாளர்கள் மற்றும் நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவைப் பெற்றுத் தரும். 

4. ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமைச்சு வளாகத்திலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது எந்த அடிப்படையில்? 

5. இந்த சுயாதீன ஆணைக்குழுவை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையெனில், அதன் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் அவசர நடவடிக்கைகள் யாவை? 

தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள் பெண்களுக்கு சட்ட ரீதியீலான பக்க பலத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கும் வேளையில், நமது நாட்டில் பெண்களின் உரிமைகளை மீறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

6. இந்நாட்டு பெண்களின் உரிமைகளுக்காக முன்நிற்கும் பிரதான சுயாதீன நிறுவனம் இவ்வாறு செயலற்றுப்போவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது? 

அவ்வாறே, நமது நாட்டில் தொழிலாளர் படையணியில் பெண்களின் பங்களிப்பு 31-33% ஆக காணப்படுகின்றன. இதனை அதிகரிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% வளர்ச்சியை எட்ட முடியும். தேசிய பெண்கள் ஆணைக்குழுவிற்கு ஏன் இவ்வாறு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுகிறது என்பதில் பிரச்சினை எழுகிறது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் கூட ஜனாதிபதியிடம் முறைப்பாட்டைக் கையளித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »