Our Feeds


Friday, February 20, 2026

Zameera

எல்லா அரசினாலும் புறக்கணிக்கப்படுகின்றோம் - செ.நிலாந்தன்


 மட்டக்களப்பு மாவட்ட தளவாய் வட்டாரம், வீதி அபிவிருத்தி விடயங்களில் எல்லா அரசினாலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 19ஆவது அமர்வில் கலந்து கொண்ட உரையாற்றியபோது அவர் இது குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அதிகூடிய வீதிகளைக் கொண்ட வட்டாரமாக தளவாய் வட்டாரம் காணப்படுகின்றது. ஆனால் வீதி அபிவிருத்தி திட்டங்களில் தளவாய் வட்டாரம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

செங்கலடி - 01, ஐயன்கேணி, தளவாய் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட தளவாய் வட்டாரத்தில் சுமார் 50 இக்கு மேற்பட்ட வீதிகள் காணப்படுகின்றது. இவற்றில் 30இக்கு மேற்பட்ட வீதிகள் மணல் வீதிகளாகவும், கிரவல் வீதிகளாகவும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதிகளை புனரமைப்பு செய்வதிலும், புதிதாக அமைப்பதிலும் எல்லா அரசுகளும் புறக்கணித்தே வந்துள்ளன. 

கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் இருந்தார். அப்போதைய அரசாங்கம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறினார்கள். மாவட்டத்தில் வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு வீதிகளை தேடித் தேடி புனரமைப்பு செய்ததாக கூறினார்கள் ஆனால் எனது வட்டாரத்தில் ஒரு வீதியைக் கூட புனரமைப்பு செய்யவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மக்கள் வாழும் எமது தளவாய் வட்டாரத்தில் வருடா வருடம் ஏற்படும் மழை வெள்ளத்தினால் அம்மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதுடன் இடம்பெயர்ந்து வரும் நிலையையே காணப்படுகின்றன.

திட்டமிடப்பட்டு வீதிகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை. பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமையில்தான் எல்லா வீதிகளும் காணப்படுகின்றது. வீதிகள் புனரமைப்பு செய்யும் போது வடிகால்கள் இல்லாமல் வீதிகளை புனரமைப்புச் செய்வதால் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு வழியின்றி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நீர் செல்கின்றது. இதனால் மழைகாலங்களில் வீடுகளில் வசிக்க முடியாமல் பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது.

பிரதேச சபையில் போதிய நிதி இல்லாததால் வீதி புனரமைப்புகளை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதேவேளை மத்திய அரசு மாற்றும் மாகாண திணைக்களங்களும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

எனவே பாதிக்கப்பட்ட வட்டார மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எமது முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு எமது கிராம வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

சீலாமுனை நிருபர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »