பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி.சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘ஒரு எம்.பிக்கு இன்றளவில் 54,285 ரூபா மாத சம்பளம், 1,000 ரூபா உபசரிப்பு கொடுப்பனவு, சாரதி கொடுப்பனவு 3,500 ரூபா, (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சாரதியை பெற்றுக்கொண்டால் பாராளுமன்றத்தின் ஊடாக 3,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது).
தொலைப்பேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலகக் கொடுப்பனவு 100,000 ரூபா, கூட்டத்துக்கான கொடுப்பனவு (நாள் ஒன்றுக்கு) 2,500 ரூபா, பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு 2,500 ரூபா (நாளொன்றுக்கு) பாராளுமன்ற குழுக்களில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு), பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வு இல்லாத நாட்களில் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு) என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் எம்.பிக்களின் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினருக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் எரிபொருளுக்கான சந்தைப் பெறுமதிக்குரிய கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. நயன வாசலதிலக தமக்கு எம்.பிக்குரிய சம்பளம் வேண்டாம் என்று 2025.08.20ஆம் திகதியன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய அவருக்கு அந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.
பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர், பிரதி குழுக்களின் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் எரிபொருள் கொடுப்பனவை பெறுவதில்லை.
ஆளுந்தரப்பின் 159 எம்.பிக்களினதும் மாதச் சம்பளம் ஜே.வி.பியின் நிதியத்துக்கு செல்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆளுந்தரப்பின் 159 எம்.பிக்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் எம்மால் அரசியல் தீர்மானங்கள் மற்றும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் நிதியம் பற்றி வெளிப்படையாக உங்களினால் குறிப்பிட முடியுமா? அவ்வாறு குறிப்பிட்டால் அது ஏனையவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்’’ என்றார்.
