பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற நீதித்துறை திருத்தச் சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபீன் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
‘‘எமது மக்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் சரத்துக்கள் என்னவென்று நாங்கள் பலமுறை வினவியுள்ளோம். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து விட்டு சம்பளம் வழங்குவது தவறு என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்.
சம்பள அதிகரிப்புடன் முன்மொழிந்த இந்த ஒப்பந்தத்தில் தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி பல்வேறு தரப்பினர் கோரியுள்ள நிலையில் இதுவரையில் ஒப்பந்தம் வெளிப்படுத்தப்படவில்லை. நாங்களும் கேட்டோம் கிடைக்கவில்லை. தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக கேட்டும் அதனூடாகவும் கிடைக்கவில்லை.
முதலில் இது ஒரு ஒப்பந்தமே அல்ல, புரிந்துணர்வு உடன்படிக்கை மாத்திரமே. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் 4.1 பிரிவில் தோட்டத்தொழிலாளர்கள் 180 நாட்கள் கட்டாயம் சேவையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோது தோட்டக் கம்பனிகள் இதே 180 நாள் நிபந்தனையை முன்வைத்தன. நாங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்களை 180 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய வைத்தால் அவர்களை நிரந்தர வேலைக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் பெரும்பாலான தோட்டங்கள் 180 நாள் தொழில் வழங்காமல் 170 நாட்கள், 175 நாட்கள் என்ற அடிப்படையில் தொழில் வழங்கி, பின்னர் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டதன் பின்னர் ஆரம்பத்தில் இருந்து வேலை வழங்கலை புதுப்பிக்கின்றன.
தற்போது 25 நாட்கள் கட்டாய வேலை என்று குறிப்பிடப்படுகிறது. எந்த தோட்டங்களுக்கும் தற்போது 25 நாட்கள் வேலை வழங்குவதில்லை. ஆகவே, இந்த 180 நாள் கட்டாய வேலை என்ற நிபந்தனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கக்கூடாது.
அதேபோல், உடன்படிக்கையில் 08ஆம் சரத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது வழங்கப்படும் சம்பள அதிகரிப்பை ஒரு காலத்தில் இடைநிறுத்தினால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது’’ என்றார்.
