Our Feeds


Monday, February 9, 2026

Zameera

ஆசிரியர் நியமன வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு


 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

நேற்று (08) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள், 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் என்று சொல்வதை விட ஏமாற்றப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள். 

அந்த வகையில் இந்த ஆண்டில் அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து மாகாணத்தையும் எடுத்து நோக்கும் போது கிழக்கு மாகாணம் மாத்திரம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாகக் கூறி அதிகளவான விளம்பரங்கள் விடப்பட்டாலும், உண்மை நிலவரம் இந்த அறிக்கையைப் பார்க்கும் போதே தெரிய வந்துள்ளது. 

அந்த அடிப்படையில் இந்த அறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான பாடநெறிகள் தவிர்க்கப்பட்டு மிகவும் குறைந்தளவிலான பாடநெறிகளே அதிலும் கலைப் பாடங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டே இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக எதுவித போட்டிப் பரீட்சைகளுக்கும் உள்வாங்கப்படாமல் இருக்கின்றார்கள். ஓன்றிரண்டு பரீட்சைகள் தோற்றினாலும் குறைந்தளவிலான ஆட்சேர்ப்புகளே இடம்பெற்றுள்ளன. அத்துடன் பல பரீட்சைகள் இதுவரை நடாத்தப்படாமலும் இருக்கின்றன. 

2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்கும் எந்தவித போட்டிப் பரீட்சைக்கும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தோற்ற முடியாதவாறான சூழ்நிலை இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் அதிகளவான பாடங்கள் இருந்த போதிலும் விரிவுரையாளர்களின் கருத்திற்கிணங்கள் நாங்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தெரிவு செய்து கற்றும் அப்பாடங்களுக்கான எவ்வித ஆட்சேர்ப்பு முறைகளும் இல்லாமல் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. 

குறிப்பிடட சில முக்கிய பாடங்களுக்கான பரீட்சைக்கான வாய்ப்புகள் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் எதுவித விசேட சலுகைகளும் கோரவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பினையே நாங்கள் கோருகின்றோம். பல பரீட்சைகளுக்கு கட்டணங்கள் செலுத்தியுள்ள போதிலும் வேலைவாய்ப்புகள் எதுவும் காட்டப்படாத நிலையில் எந்த நம்பிக்கையில் பரீட்சைக்கு சமூகமளிப்பது. 

எங்களுக்காக ஆதரவு வழங்க வேண்டிய கிழக்கு மாகாண அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் என்று எமக்குத் தெரியவில்லை. இது தொடர்பில் யாரிடம் முறையிடுவதென்று தெரியாத நிலையில் ஊடகங்களை நம்பி வந்துள்ளோம். 

நாங்கள் பரீட்சைகளைப் புறக்கணிக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்குத் தயாராக இருக்கின்றோம். கடந்த ஆறு வருடங்களாக அதற்கான வாய்ப்புகள் இல்லாமலே தவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே உரிய அதிகாரிகள் இதற்கான காரணத்தை எமக்குத் தெரியப்படுத்தி பரீட்சைக்கான வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அவர்கள் எம்மைப் பொறுமையாக இருக்கும் படியாகக் கூறியிருந்தார்கள். நாங்களும் இதுவரை எதுவித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தாமல் இருந்தோம். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்பு சுற்றுநிருபமும் எமக்கு எதிராகவே இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் மனவேதனைக்குள்ளாகியிருக்கின்றோம். 

எமக்கு வெளிவந்த அறிக்கையும் முதலில் சிங்களத்தில் மாத்திரமே பெறப்பட்டது தற்போதே அதன் தமிழ் மொழி எமக்குக் கிடைத்துள்ளது. இதனால் எவருடனும் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முடியவில்லை. துறந்த சுற்றுநிருபத்தின் மூலம் எமக்கான வாய்ப்புகள் அறவே இல்லை. 

நாங்கள் விசேட சலுகைகள் எதுவும் கேட்கவில்லை. போட்டிப் பரீட்சைகளுக்கான வாய்ப்புகளையே தருமாறு கேட்கின்றோம் என்று தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »