Our Feeds


Tuesday, February 24, 2026

SHAHNI RAMEES

"உங்கள் வங்கிக் கணக்கு குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளது" - பொலிஸார் என நாடகமாடி நூதன பண மோசடி!

 


பொலிஸ் அதிகாரிகள் என நாடகமாடி பொதுமக்களின்

பணத்தை மோசடி செய்த சம்பவங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாகச் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மோசடிக் கும்பல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் பயன்பாட்டிலுள்ள சாதாரண தொலைபேசி இலக்கங்களை ஒத்த வெளிநாட்டுத் தொலைபேசி இலக்கங்களினூடாக மோசடியாளர்கள் பொதுமக்களுடன் தொடர்புகொள்கின்றனர். இதன்போது, தாம் வங்கி அல்லது பிரபல நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர்கள், குறித்த நபரினுடைய வங்கிக் கணக்கு குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர்.



அதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகள் எனும் பெயரில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தும் வேறொரு நபருக்கு அந்த அழைப்பை மாற்றுகின்றனர். இதன்போது, குறித்த நபர் 'வாட்ஸ்அப்' (WhatsApp) காணொளி அழைப்பின் ஊடாக பொலிஸ் சீருடையில் தோன்றி, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களினால் உங்களது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றார்.


அப்பணத்தை விசாரணைகளுக்காக மீளப் பெற வேண்டும் எனக்கூறி, பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளைப் பரிசோதிப்பதாகத் தெரிவித்து, அதில் உள்ள பணத்தை மோசடியாளர்கள் வழங்கும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்யுமாறு கோருகின்றனர். இவ்வாறு நூதனமான முறையில் பாரிய நிதி மோசடிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.


இவ்வாறு மோசடியாளர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம், பல வங்கிக் கணக்குகளின் ஊடாகப் பரிமாற்றப்பட்டு, பின்னர் 'பைனான்ஸ்' (Binance) கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சி (Crypto-currency) எனப்படும் 'மெய்நிகர் நாணயமாக' (பௌதிக ரீதியாகப் பயன்படுத்த முடியாத டிஜிட்டல் நாணய அலகுகள்) மாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், இணையம் ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, தமது கணக்குகளுக்கு வரும் பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்து, அதற்காகத் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இவ்வாறான மோசடிகள் ஊடாகப் பொதுமக்களின் பணம் தொடர்ச்சியாகக் கொள்ளையிடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, தமது தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களையோ அல்லது இணையவழிப் பணப் பரிமாற்ற விபரங்களையோ எக்காரணம் கொண்டும் இவ்வாறான மோசடியாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெறின், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »