சம்பவத்தின் பின்னணி:
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடல் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவரால் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகளே சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
நடவடிக்கை எடுக்காமை குறித்த குற்றச்சாட்டு:
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரையில் எவ்வித சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி வைத்தியசாலை வளாகத்தில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்திருந்தனர்.
இன்றைய போராட்டமும் நீதிமன்றத் தடையும்:
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், குற்றவாளிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) அமைதிவழிப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், நோர்வூட் பொலிஸார் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நீதவான் தமயந்தி பெர்னாண்டோ இப்போராட்டத்திற்குத் தடை விதித்துள்ளார்.
யாருக்குத் தடை?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பிரதித் தலைவர் மருதபாண்டி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் குழந்தைவேல் ரவி, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் முன்னாள் உப தலைவர் பெருமாள் சுரேந்திரன் உள்ளிட்ட இ.தொ.கா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.கிருஷ்ணா
