ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா இந்தியத்
துறைமுகங்களைப் பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவை முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் போலியான தகவல்கள் என இந்தியா எச்சரித்துள்ளது.அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் கேர்ணல் டக்ளஸ் மெக்ரிகோர் 'ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்' (OAN) என்ற அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களே இந்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன.
ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் அனைத்து இராணுவத் தளங்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக மெக்ரிகோர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அமெரிக்க கடற்படை தற்போது இந்தியத் துறைமுகங்களை ஒரு பாதுகாப்பான தளமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சின் 'உண்மைச் சரிபார்ப்பு' பிரிவு கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை. இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதுகைகள் குறித்து இந்தியா தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றது.
ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் 6 ஆவது நாளாகத் தொடர்கிறது.
இந்தியாவில் நட்பு ரீதியான விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை ஈரானில் 1,000 க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் ஒரு தொகுதியினரும், 06அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
