Our Feeds


Thursday, March 12, 2026

Zameera

அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி


 (எம்.ஆர்.எம்.வசீம்)

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11)  நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில்  கலந்துகாெண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. என்றாலும் எமது  நாட்டில்  ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் கைவசம் வைத்திருப்பதாகவும் இப்போதைக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளத் தேவைப்படாது எனவும் ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நாட்டுக்கு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அரசாங்கம் திடீரென் எரிபொருட்களின் விலையை அதிகரித்திக்கிறது. அப்படியாயின் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்திருக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதிகரித்த விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்திருந்தால், அதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் தற்போது அதிகரித்திருப்பது, கையிருப்பில் இருந்த எரிபொருட்களுக்காகும். 

அதேபோன்று எரிவாயு விலையை நேற்று முதல் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான 8ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கைவசம் இருப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தற்போது எரிவாயு விலை அதிகரித்திருப்பதும் கைவசம் இருந்த எரிவாயு தொகைக்காகும். அரசாங்கத்தின் இந்த விலை அதிகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த விலை அதிகரிப்பு சட்ட விராேத நடவடிக்கையாகும்.இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை குறைகூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

அரசாங்கம் கறுப்புக்கடை வியாபாரிகள் போன்று செயற்பட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரித்து, பாரிய லாபத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று  கறுப்பு கடை முதலாளிமார்கள் போன்று செயற்படுகிறது. 

இவர்கள் எதனை செய்வதில்லை என தெரிவித்தார்களோ அதனை செய்கிறார்கள். மின்சார சபையை தனியார் மயமாக்கப்போவதில்லை என்றார்கள். அதனை தற்போது செய்திருக்கிறார்கள்.

தரம் குறைந்த  நிலக்கரி கொண்டுவருவதில்லை என்றார்கள்.  தற்போது அதனை செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் செய்வதில்லை என மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் இன்று செய்துவருகிறது. அதனால் தொடர்ந்தும் மக்கள் இந்த  அரசாங்கத்தை நம்பப்போவதில்லை என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »