Our Feeds


Monday, March 9, 2026

SHAHNI RAMEES

இஸ்ரேல் மீது - ஈரான் கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்துகிறது! - சிறீதரன் கவலை

 

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார்.



“சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்:



“ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள்.



2009-ல் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, அதன் சிதைவுகளையும் ஆவணங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் பெண்களின் துணிச்சல்மிக்க பங்களிப்பு மகத்தானது.



ஈரான் இன்று இஸ்ரேல் மீது கொத்துக்குண்டுகளை வீசுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ள சூழலில், அன்று 22 நாடுகளின் துணையோடு தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்துவிடக்கூடாது.



குறிப்பாக, ஐநா சபையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்த ஈரானின் நிலைப்பாட்டையும், ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றிய அமெரிக்காவின் தமிழர்கள் மீதான சார்பு நிலைப்பாட்டையும் நாம் நினைவில் வைத்து இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.



பெண்கள் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஒரு இருண்ட யுகத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எங்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளினாலும், எமது பெண்கள் தாய், தாரம், பிள்ளை எனப் பல பரிமாணங்களில் சமூகத்தை வழிநடத்துகிறார்கள்” எனக் குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.



தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ‘மண்ணின் மாதவம்’ எனும் உயரிய விருது வழங்கும் வைபவமும் நடைபெற்றது.



அடக்குமுறைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் எதிராக ‘சுதந்திரப் பறவைகளாய்’ எழுந்து நிற்கும் ஈழப் பெண்களின் உறுதியான மனோதிடத்தை வெளிப்படுத்தும் எழுச்சிமிகு நிகழ்வாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.



சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி. கணேஸ்குமார் கிறேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி. சோமசேகரம்பிள்ளை செல்வராணி, திருமண, பிறப்பு, இறப்புப் பதிவாளர் திருமதி. கிருஸ்ணராசா தயாநிதி, பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி. குலவீரசிங்கம் குணலட்சுமி, பால்நிலை சமத்துவ தலைமை வளவாளர் திருமதி. விநாயகமூர்த்தி கமலினி, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திருமதி நிஷாந்தன் விவேகி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பரணிதரன் சரண்யா, பிரதேச சபையின் தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »