கண்டி - பேராதனை பகுதியில் அமைந்துள்ள 'யக்கா பாலம்'
புனரமைப்புப் பணிகளை திட்டமிட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கருத்து தெரிவிக்கையில், பாலத்தின் கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் அது மீண்டும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
டித்வா சூறாவளி தாக்கி மூன்று மாதங்கள் கடந்தும், ரயில் பாதைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றன.
அரசாங்கம் இப்பாலத்தின் பணிகளை ஏப்ரல் 28ஆம் திகதிக்குள் முடிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் மூலம் பணிகள் நடப்பதாகப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாலம் தற்போது மீண்டும் ஒரு பக்கமாகச் சரிவடைந்துள்ளதே உண்மை.
இதனால் கண்டியிலிருந்து தினசரி அரச மற்றும் தனியார் துறை வேலைகளுக்குச் செல்லும் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக உலப்பனை மற்றும் நாவலப்பிட்டிக்கு இடையில் தரித்து நிற்கும் ரயில் பெட்டிகளை இலகுவாகக் கொண்டு செல்ல வாய்ப்பிருந்தும், ரயில்வே திணைக்களம் இது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
