வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
"மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது 'ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த' கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7,500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23,000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55,000 முதல் 65,000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும்.
ஆனால், சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு முதல் தடவை சிக்கினால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறைச் செய்தால் 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவையும் சிக்கினால் குறித்த வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது குறித்து நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு அஞ்சும் மக்கள், அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கத் தயங்குகின்றனர். எனவே, இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துத் தகவல் வழங்க விரைவில் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவோம். இத்தகைய செயற்பாடுகளை பொலிஸாரோ அரசாங்கமோ தனித்து நின்று கட்டுப்படுத்த முடியாது; பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானது" என அவர் மேலும் தெரிவித்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
