Our Feeds


Saturday, April 18, 2026

Zameera

நீர் நிலைகளில் பதிவான விபத்துகளில் 20 பேர் உயிரிழப்பு


 (செ.சுபதர்ஷனி)


இவ்வருடம் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 20 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


பத்தரமுல்ல பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த 12 ஆம் திகதி முதல் வியாழக்கிழமை (16)  வரையான காலப்பகுதியில் மாத்திரம் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவான விபத்துகளில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான அனர்த்தங்களுக்குப் பெற்றோரும் பெரியோரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாமையே முக்கிய காரணம். சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காலத்தை முன்னிட்டு மக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதோடு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி பலர் உயிரிழந்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.


குறிப்பாக கோபேகனே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் சோகமானது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே மிகவும் பாதுகாப்பற்ற ஓரிடத்தை நீராடுவதற்காகத் தெரிந்தெடுத்துள்ளனர். அங்கிருந்த பெரியவர்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஐவரைப் பாதுகாப்பாக மீட்க முடிந்தது.



நாட்டின் இளைய சமுதாயத்தினரையும் உழைக்கும் வர்க்கத்தினரையும் இவ்வாறு அகால மரணங்கள் மூலம் இழப்பது நாட்டிற்குப் பெரும் இழப்பாகும். எதிர்வரும் நாட்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும், அறிமுகமில்லாத மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிருங்கள். தற்போது நாடு முழுவதும் உள்ள குளங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பிற்காக 400-இற்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


எனவே, பாதுகாப்பான இடங்களை மாத்திரமே நீராடுவதற்குத் தெரிவு செய்யுங்கள். ஆபத்தான இடங்கள் குறித்து பொலிஸாரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் கொடிகளை அவதானித்து அதற்கேற்பச் செயல்படுங்கள். பாதுகாப்பு என்பது பொலிஸாரின் அல்லது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல, இது ஒவ்வொருவரதும் சமூகப் பொறுப்பாகும். கிராம மட்டத்திலான சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நலன்புரிச் சங்கங்கள் ஒன்றிணைந்து இவ்வாறான அனர்த்தங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »