சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு
சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் இணையவழி ஏமாற்று வேலைகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் இணையத்தைப் பயன்படுத்தும் வீதம் அதிகரித்துள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, அரசாங்க நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பிரபல வர்த்தக நிலையங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிப்புகள் பரப்பப்படுகின்றன.
நிகல்நிலை மூலமான போட்டிகள் மற்றும் ஏனைய புத்தாண்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன.
கவர்ச்சிகரமான பரிசுகள் அல்லது பணப்பரிசுகள் கிடைத்துள்ளதாகக் கூறி போலியான இணைய இணைப்புகள் அனுப்பப்படுகின்றன. இவற்றை கிளிக் செய்பவர்களின் வங்கித் கணக்குகளில் இருந்து அத்துமீறிய பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே, இத்தகைய பாதிப்புகளில் இருந்து தவிர்ந்துகொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேகத்திற்கிடமான அல்லது அறிமுகமில்லாத இணைய இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
உறுதிப்படுத்தப்படாத தளங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வங்கி விபரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
உங்களது வங்கி இரகசியக் குறியீடுகள் அல்லது ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை எவருக்கும் வழங்க வேண்டாம்.
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் எவையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட நிதி விபரங்களைக் கோருவதில்லை என்பதால், இத்தகைய அறிவிப்புகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
