Our Feeds


Tuesday, April 7, 2026

Zameera

ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் - ட்ரம்ப்






 ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8.00 மணியுடன் நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார். 


இன்று இரவு 8.00 மணிக்குள் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் வரத் தவறினால், அந்த நாட்டுக்கு எதிராகக் கடுமையான அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். 


நள்ளிரவுக்குள் ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, ஈரான் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 


இன்றைய தினத்திற்குப் பிறகு ஈரானுக்கு மீண்டும் எந்தவொரு கால அவகாசமும் வழங்கப்பட மாட்டாது என்று வலியுறுத்திய ட்ரம்ப், இந்தப் போருக்கு ஆதரவு வழங்காத நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த இராணுவ வீரரை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார். 


அந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமானது என்றும், அதில் உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட வீரர்களுக்குத் தனது மரியாதையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 


இதேவேளை, மத்திய கிழக்கின் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த யோசனைக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளதுடன், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பதிலாகப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. 


இதற்காக ஈரான் 10 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »