Our Feeds


Tuesday, April 7, 2026

Zameera

எளிமை பேசும் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கை - சஞ்சீவ எதிரிமான்ன


 அரசியல்வாதிகள் சொத்துக்களைக் குவிக்காமல், மக்களின் வாழ்க்கையை மதித்து, மிகவும் எளிமையான முறையில் முன்மாதிரியாக வாழ வேண்டும் எனச் சமூகத்திற்குப் போதித்த லால் காந்தவின் தற்போதைய சொகுசு வாழ்க்கை, அவரது அரசியல் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (06) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

அமைச்சர் லால் காந்தவின் வீடு குறித்து தற்போது நாடு தழுவிய ரீதியில் பாரிய அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்த வீட்டை ஒரு காலத்தில் 'தேசிய மரபுரிமையாக' அறிவிக்க வேண்டும் என தான் முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 60 ஆண்டுகாலமாக "தூய அரசியல்" பேசுவதாகக் கூறிக்கொண்டு, திசைக்காட்டி தரப்பினர் முன்னெடுத்த அரசியல் நாடகத்தை ஒரு சில நிமிடங்களில் இந்த மாளிகை உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் சேர்த்து 160 பேர் நாடாளுமன்றக் குழுவாக உள்ள நிலையில், அவர்களில் அரசியலுக்கு வருவதற்கு முன் உயர் மட்டத் தொழில்களில் ஈடுபட்டு, பல லட்சம் ரூபாய்களை ஊதியமாகப் பெற்றவர்கள் இருப்பதாகவும், அப்படிப்பட்ட ஒருவர் பெரிய வீடு கட்டுவதிலோ அல்லது வாகனம் வைத்திருப்பதிலோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவொரு வேலையோ அல்லது வியாபாரமோ செய்யாமல், முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே இருந்த லால் காந்த போன்ற ஒருவரால் இவ்வளவு பெரிய மாளிகையை எப்படிக் கட்ட முடிந்தது என்ற கேள்வியை அவர் எழுப்பினார். தன்னிடம் ஒரு சதம் கூட இல்லை என்று கூறியவர் எப்படி இதைச் சாதித்தார் என வினவிய அவர், தன் பிள்ளைக்கு ஒரு புல்லாங்குழல் கூட வாங்கிக் கொடுக்க முடியாத ஏழைத் தந்தையர்கள் இவர்களது பேச்சைக் கேட்டு ஏமாந்த போதிலும், இன்று அந்த வீட்டில் பியானோக்கள் வாசிக்கப்படுவது அரசியலில் பாரிய முரண்பாடாகும் என்றார்.

 "அரசியல்வாதி சொத்து சேர்க்கக் கூடாது" எனப் போதித்த லால் காந்தவிற்கு இவ்வாறான மாளிகையில் வாழ்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது எனக் கேள்வியெழுப்பிய அவர், இவ்வளவு பெரிய கொள்கைகளைப் பேசிய ஒருவருக்கு லாட்டரி விழுந்தால் கூட, மனசாட்சி இருந்தால் இவ்வாறான வீட்டைக் கட்ட மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

மாலிமாவ அரசியலில் இருப்பவர்கள் இத்தனை காலம் மற்ற அரசியல்வாதிகளின் உடைகள், வாகனங்கள் மற்றும் பிள்ளைகள் குறித்து மிக மோசமாக விமர்சித்த நிலையில், தற்போது அதற்குரிய பதிலடியையே தான் கொடுப்பதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். 

முழுநேர அரசியல் செய்துவிட்டு, எவ்விதத் தொழிலும் இன்றி சொத்து சேர்த்துள்ள இந்த அரசியல்வாதிகளின் போலித்தனத்தை இனியாவது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

(ஞான பிரசாந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »