கடந்த, 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த வான்வெளியை, நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கும் திட்டத்தை ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக, விமானப் போக்குவரத்தை மேற்காசிய நாடான ஈரான் நிறுத்தி வைத்திருந்தது. மேலும், தன் வான்பரப்பை மற்ற நாடுகள் பயன்படுத்தவும் தடை விதித்திருந்தது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடந்து வரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தன் வான்வெளியை மீண்டும் திறக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதை, நான்கு கட்டங்களாக செயல்படுத்தவும், முதற்கட்டமாக உள்நாட்டு சரக்கு விமானங்கள் மற்றும் அவசரகால சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வான்வெளியை திறப்பதற்கான திட்டத்தை அறிவித்த போதிலும், பயணியர் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை. முறையான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் அமெரிக்காவுடனான அமைதி பேச்சின் முடிவை பொறுத்தே இது அமையும் என தெரிகின்றது.
இரண்டு மாதங்களாக வான்வெளி மூடப்பட்டிருப்பதால் ஈரான் விமான போக்குவரத்து துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதை ஈடு செய்யவே இந்த படிப்படியான திறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான அமைதி பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, முழுமையான விமான போக்குவரத்து மற்றும் சர்வதேச சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
