உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்து
செயற்பட்டவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். கம்மன்பிலவின் புத்தகம் சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சாராம்சமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.கொழும்பில் சனிக்கிழமை (4) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் தலைமையிலான குழுவே மேற்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்காக பின்னணியில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த ஒரு குழு இருக்கிறது என்பதை இந்த தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய அதிகமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் யார் என கண்டுபிடிக்குமாறே தெரிவிக்கிறோம்.
ஏனெனில் சஹ்ரானுடன் யாராவது கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டிருக்கிறார்கள் என குற்றப்புலனாய்வு பிரிவும் தெரிவித்திருக்கிறது. அவர்கள் யார் என்பதே தற்போது தேடவேண்டும். ஏனெனில் சஹ்ரான்தா்ன் இந்த குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார் என்பதில் யாருக்கும் எந்த வாக்குவாதமும் இல்லை. அதனை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிவிக்க வேண்டியதில்லை. ஆனால் சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு பின்னால் இருந்து அவர்களை வழிநடத்திய குழு யார் என்பதே கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். அதனாலே இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுடிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக இந்த அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது. நாங்களு தெரிவித்திருந்தோம். அதன் விசாரணையின் பிரகாரமே தற்போது புலனாய்வு துறையின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகி இருந்தார். பிள்ளையான் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் அவரின் சட்டத்தரணியாகவும் உதய கம்மன்பில ஆஜராகி இருந்தார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொட்பில் எழுதியிருக்கும் புத்தகம், புலனாய்வு துறையின் முன்னாள் பிரதானியின் சட்டத்தரணியாவே உதய கம்பன்பில எழுதியிருக்கிறார். அப்படியானால் எவ்வாறு இவர் நேர்மையாக இந்த புத்தகத்தை எழுதியிருக்க முடியும்? கைது செய்யப்பட்டிருக்கும் புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதானிக்கு எதிரான விசாரணை முடிவடைவதற்கு முன்னர், அவருக்கு இந்த தாக்குதலுடன் எந்த தொடர்பும் இல்லை என உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார். அவ்வாறு தெரிவிக்கக்கூடியவர் புத்தகம் எழுதுவதில் பயன் இல்லை. அதனால் அந்த புத்தகத்தில் எந்த பெறுமதியும் இல்லை.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவ்பர் மெளலவி என அவருடன் ஒன்றாக அமைச்சரவையில் இருந்த சரத் வீரசேககர தெரிவித்திருந்தார். அதேநேரம் சுரேஸ் சலேயின் வாக்குமூலத்தில் வேறு ஒருவரின் பெயரே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கம்மன்பில வேறு ஒருவரை தெரிவிக்கிறார். ஒரு அணியில் இருந்த மூன்றுபேரும் இந்த தாக்குதலின் சூத்திரதாரி என மாறுபட்ட கருத்தையே தெரிவித்திருக்கிறார்கள். சலே என்பவர் கோட்டாய ராஜபக்ஷ்வின் வலது கை. அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனாலே கோட்டாய ராஜபக்ஷ் ஜனாதிபதியானதுடன் அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் கலைத்துவிட்டு, சுரேஷ் சலேயை அதன் பிரதானியாக நியமித்தார்.
அத்துடன் கம்மன்பில எழுதியிருக்கும் புத்தகத்தை வாசித்து பார்த்தால், சுரேஸ் சலே வழங்கிய வாக்குமூலத்தின் சாராம்சமே அதில் இருக்கிறது. அதனால் சுரேஸ் சலேயின் வாக்குமூலத்தை வாசித்தால், உதய கம்மன்பிலவின் புத்தகத்தை வாசிக்கத்தேவையில்லை. ஏனெனில் உதய கம்மன்பில ஆய்வு செய்து புத்தகம் எழுதக்கூடியவரோ அல்லது குண்டுதாரிகளுக்கு பின்னால் சென்று அவர்களிடமிருந்து தகவல் சேர்த்தவரோ அல்ல. அப்படியானால் அவர் சுரேஸ் சலேயின் வாக்கு மூலத்தில் இருந்தே தகவல்களை எடுத்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
எனவே அரசியலில் வங்குராேத்து அடைந்த இவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு, மக்கள் மத்தியில் தலைதூக்கவே தற்போது முயற்சிக்கின்றனர். வங்குராேத்து அடைந்த அரசியல் வாதிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமே இடமளித்து வருகிறது. அதனாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இன்னும் பல தொகுதிகள் வெளிப்படுத்தாமல் இருக்கின்றன. அவை பாராளுமன்ற நூலகத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையிலே இருக்கின்றன. அதனால் இந்த விசாரணை அறிக்கையின் அனைத்து தொகுதிகளையும் மக்கள் பார்ப்பதற்கு முடியுமான வகையில் வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் வலிறுத்துகிறோம் என்றார்.
