Our Feeds


Friday, April 17, 2026

Zameera

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பிணையில் விடுவிப்பு


 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.



சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றகரமான நிலையை அறிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக, 6 ஊழியர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களை முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்ததன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »