கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பவற்றில் உள்ள பெட் இயந்திரங்கள் கடந்த ஒரு மாத காலமாக செயலிழந்து காணப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து பெட் ஸ்கேன் சேவை முற்றிலும் முடங்கியுள்ளமையானது ஒரு சாதாரண தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல. அது சுகாதாரக் கட்டமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விக்குத் தெளிவான சான்றாகுமென சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் விளக்கமளித்து அவர் நேற்று (28) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலைகளில் மாத்திரம் இயங்கிவந்த இச்சேவை, FDG (Fluorodeoxyglucose) எனும் கதிரியக்கத் திரவம் இல்லாததால் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண வழங்கல் பிரச்சினை (supply issue) அல்ல. இது தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஒழுங்குமுறையிலுள்ள காலதாமதமாகும். விநியோகஸ்தரின் பதிவை புதுப்பிக்காத காரணத்தால் நாட்டுக்கு FDG எனும் கதிரியக்க திரவத்தைக் கொண்டுவருவதை முழுமையாக நிறுத்தியமையானது, அதன் விளைவை நன்கறிந்தே செய்யப்பட்டதொரு நிர்வாகத் தோல்வியாகவே கருதப்பட வேண்டும்.
PET Scan என்பது ஓர் ஆடம்பரப் பரிசோதனை அல்ல. இது புற்றுநோய் தொடர்பான மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான (oncology clinical decisionmaking) ஒரு மிக முக்கியமான பரிசோதனையாகும் (functional imaging gold standard). புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, அதன் நிலை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு இது அத்தியாவசியமானது. இத்தகையதொரு முக்கியமான பரிசோதனை சேவையை நிர்வாகத் தடையால் நிறுத்துவது, நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் ஒரு முடிவாகும்.
FDG திரவத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பம் (cyclotronbased radiopharmaceutical production) இலங்கைக்குப் புதிய ஒன்றல்ல. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திரவத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்முறை முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு PET Scan பரிசோதனைக்கான செலவை பெருமளவு குறைத்து, நோயாளிகளுக்கு மலிவு விலையில் சேவையை வழங்க முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த முன்மொழிவுகளைப் புறக்கணித்ததன் விளைவாக, இன்று நாம் FDG இல்லாமல் PET Scan சேவையை நிறுத்திய ஒரு நாடாக மாறியுள்ளோம்.
இந்தியாவில் ஒரு PET Scan பரிசோதனையை (FDG உட்பட) சுமார் 10,000 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்வதற்கான வாயப்புள்ள நிலையில், இலங்கையில் தனியார் துறையில் இதற்காக 2 முதல் 3 இலட்சம் ரூபா வரை செலவிடவேண்டியுள்ளது. இது சந்தை தோல்வி (market failure) அல்ல, கொள்கை தோல்வி (policy failure) ஆகும். தொழில்நுட்பம் இல்லாததால் அல்ல, தீர்மானம் எடுப்பதில் உள்ள தோல்வியால் நோயாளிகள் அதிகச் செலவைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில், நோயாளி களிடம் பணம் இருந்தாலும் ஒரு PET Scan செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையானது, சுகாதாரக் கட்டமைப்பு முறையாகத் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. ஒழுங்குமுறைகள் சேவையை இலகுபடுத்த வேண்டுமே தவிர, அது சேவையைத் தடுக்கும் ஒரு தடையாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனைச் சரிசெய்ய FDG திரவத்துக்காக அவசர ஒழுங்குமுறைப் பாதை (emergency regulatory pathway) ஒன்றை உருவாக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திக்காக சைக்ளோட்ரான் (cyclotron) உட்கட்டமைப்பை நிறுவவேண்டும்.
புற்றுநோய் தொடர்பான இமேஜிங் சேவைகளைத் தேசிய முன்னுரிமையாக (national priority) அங்கீகரிக்க வேண்டும்.
இல்லையெனில், ‘இலவசக் காப்புறுதி’ அல்லது ‘இலவச சுகாதாரம்’ என்பது வெறும் பெயரளவு வார்த்தையாகவே எஞ்சியிருக்கும் என்று குறிப்பிட்டார்.
(சில்வெஸ்டர் டொரின்)
