Our Feeds


Thursday, April 16, 2026

SHAHNI RAMEES

ரணிலினால் மட்டுமே முடியும்!

 


வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை

  அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும் காலனித்துவ நிலைக்கு செல்லும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.


காலியில் புதன்கிழமை (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்றதுபோலவே தற்போதும் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறை செய்யாமல் இருப்பதற்கே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கிறார்கள்.  அதனால் அரசாங்கத்தின் தவறுகளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தவறுகள்  இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தப்பித்துக்கொள்ள முடியாது.


அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப  பல சட்டங்களை எமது காலத்தில்  நாங்கள் ஏற்படுத்தி இருந்தோம். குறிப்பாக பொருளாதார கொள்கை சட்டம் தற்போது முற்றாக மீறப்பட்டு வருகிறது. இது பாரிய பிரச்சினையாகும். அதனால் நாட்டடை மீண்டும் கட்டியெழுப்ப பாரிய மாற்றம் தேவையாகும். 77 மாற்றத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக மக்களின் வாழ்கையில் மாற்றம் ஏற்பட்டது. அன்று ஏற்பட்ட மாற்றத்தைப்போன்ற பல மடங்கு  மாற்றம் தற்போது பொருளாதாரத்துக்கு தேவையாக இருக்கிறது. அந்த மாற்றத்தை மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல் கட்சிகளால் மேற்கொள்ள முடியாது.



அதனால் அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக இருந்தால் அதனை 50 வருடகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அவருக்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் சிறந்த அனுபவம் இருப்பதுடன் சர்வதேசம் தொடர்பில் சிறந்த புரிதல் அவருக்கு இருக்கிறது. அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும், காலனித்துவ நிலைக்கு செல்லும்.


ரணில் விக்ரமசிங்க 2022 நாட்டை பொறுப்பேற்கும்போது டொலர் ஒன்று சட்ட ரீதியில் 380 ரூபாவுக்கு இருந்தது. வெளியில் 400 ரூபாவுக்கு விற்பனையாகி வந்தது. என்றாலும் நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின்  பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவே  திட்டமிட்டு வந்தார். அவ்வாறான திட்டமிடலுடனே தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டின் பொறுப்பை வழங்கும்போது டொலரின் பெறுமதி 290, 295 ரூபாவுக்கே இருந்தது. ரணில் விக்ரமசிங்க தயாரித்த பொருளாதார கொள்கை சட்டத்தின் பிரகாரம் தற்போது டொலரின் பெறுமதி 250 ரூபா அளவில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் உலகில் எங்கு யுத்தம் இடம்பெற்றாலும் பொது மக்கள் பாதிப்படையாதவகையில் நடவடிக்கை எடுக்க முடியுமாகி இருந்திருக்கும்.



ஆனால் இன்று டொலர் ஒன்றின் பெறுமதி  318 ரூபாவரை செல்கிறது. டொலரின் பெறுமதி ஒரு ரூபாவால் அதிகரிப்பதன் மூலம் திறைசேரியில் இருக்கும் நாட்டின் கடன் தொகைக்கு 37 பில்லியன் அதிகரிக்கப்படுகிறது. அதன் பிரகாரம் இதுவரை நாட்டின் கடன்தொகைக்கு 1.4 ரில்லியன் ரூபா அதிகரித்திருக்கிறது. இது 2 ரில்லியன் வரை செல்லும்போது அரசாங்கம் ஒன்று இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்படப்போகும் பாரிய அழிவில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்ற செய்தியையே இந்த புத்தாண்டில் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு செயற்படாவிட்டால் எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாடு காலனித்துவ நாடாகவே உரித்தாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »