மன்ஹஜ் ஏன் ஊருவானது? மவ்லவி இஸ்மாயில் சலபி விளக்கம்.
அல்-மன்ஹஜ்” என்பது பாதை, வழிமுறை என்று பொருள் தருகிறது.
“அல்-மன்ஹஜ் அஸ்-சஹீஹ்” என்று கூறும்போது, அதனை சரியான பாதை அல்லது சரியான வழிமுறை என்று பொருள் கொள்ளலாம்.
இன்ஷா அல்லாஹ், நாளை வெளியிடப்படவுள்ள “அல்-மன்ஹஜ் அஸ்-சஹீஹ்” எனும் நூல், முதன்முதலில் 2016–2017 ஆண்டுகளில் “அல்-மன்ஹஜ் அஸ்-சஹீஹ் லித்தஃவா” என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. பின்னர் 2024 ஆம் ஆண்டில் இது விரிவுபடுத்தப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஏகத்துவ (தௌஹீத்) பிரச்சாரம் குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக்கண்டது. எனினும் புதிது புதிதாக தோற்றம் பெற்ற வழிகேடான சிந்தனைகளால் அதனுடன் தொடர்புடையவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனால், குர்ஆன் மற்றும் சுன்னாவை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் ஸஹாபாக்கள் மற்றும் சலஃப் சாலிஹீன்களின் புரிதலின் முக்கியத்துவம் என்ன என்பதைக் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தௌஹீத் என்ற பெயரில் சில தவறான அணுகுமுறைகளும் தோன்றின.
உதாரணமாக:
(ஹதீஸை மறுக்கும் போக்கு
ஸஹாபாக்களை குறை கூறுதல்)
இத்தகைய வழிகேடுளையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் அவற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வரையறைகளும் அவசியமானது.
அதேபோல், கருத்து வேறுபாடுகள் தொடர்பில் சமநிலையான மற்றும் நிதானமான போக்கு இலங்கை தஃவா சூழலின் அவசியமாகியது.
இஜ்திஹாத் சார்ந்த விஷயங்களை அகீதா விஷயங்களைப் போல கடுமையுடன் அணுகும் தீவிரப் போக்கும்.
அகீதா தொடர்பான விஷயங்களை சாதாரணமாகக் கருதும் அலட்சியப் போக்கும்.
இரண்டும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
அதோடு, தௌஹீத் என்ற பெயரில் தீவிரவாதம் அல்லது கடுமையான சிந்தனைப் போக்கு உருவாகாமல் தடுக்கவும் வேண்டியது அவசியமானதாகியது. வேறுபட்ட கருத்துடைய சகோதரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டலும் தேவைப்பட்டது.
“நாம் யார்? எமது பாதை என்ன?” என்பதைக் குறித்து நாமே தெளிவாக அறிந்து, அதை பிறருக்கும் விளக்கிக் கூற வேண்டிய காலத்தின் கட்டாயம் உருவானது.
இந்த அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே “அல்-மன்ஹஜ் அஸ்-சஹீஹ்” எனும் இந்நூல் ஆகும்.
இந்த நூல்:
யாரையும் குறை கூறுவதற்காகவோ
யாரிடமும் வெறுப்பை வளர்ப்பதற்காகவோ
தொகுக்கப்படவில்லை.
மாறாக,
நம்மை நாமே திருத்திக் கொள்ளவும்
நமது அணுகுமுறையைச் சீர்செய்யவும்
எமது நிலைப்பாட்டை பிறருக்கு தெளிவாக விளக்கவும்,
புதிய வழிகேடான கொள்கைகள் நம்முள் உருவாகாமல் பாதுகாக்கவும் ஒரு வரையறுக்கப்பட்ட நெறி அமைப்பாக (guideline framework,) வடிவமைக்கப்பட்டுள்ளது.
மவ்லவி இஸ்மாயில் சலபி | அல்-மன்ஹஜ் அஸ்-சஹீஹ் (தொகுப்பாளர்கள் குழு)
