Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

ரணில் இல்லத்தில் CID விசாரணை: அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை திசைதிருப்பும் முயற்சியா?


 (எம்.ஆர்.எம்.வசீம்)


ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்துவரும் நிலையில் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்  அவர்களது வீட்டுக்குச்சென்ற நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் இது அரசாங்கத்திற்கு எதிராக நாளுக்கு நாள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என ஐக்கிய தேசி கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.


குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சென்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இதய அறுவைச் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வரும் இத்தருணத்தில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரது இல்லத்திற்குச் சென்றமை குறித்து நாம்  கவலையடைகிறோம்..


ரணில் விக்ரமசிங்கவின்  உடல்நிலை குறித்து முழுமையான அக்கறையுடன் கவனித்து வருபவர் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆவார்.  மைத்திரி விக்ரமசிங்கவும்  நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கவின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தற்போதைய நிலையில் அரசியல் நடவடிக்கைகளுக்காக எவரும் அவரது இல்லத்திற்குச் செல்வதில்லை. தொற்றுநோய்கள் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அவரைச் சந்திப்பது அவரது ஆரோக்கியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

இவ்வாறானதொரு இக்கட்டான பின்னணியில், வாக்குமூலம் பெறுவதற்காக திடீரென அவரது இல்லத்திற்குச் சென்றமையானது பொருத்தமான ஒரு செயலா? இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அறிவுரை வழங்குவது யார்? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நாளுக்கு நாள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இவ்வாறான செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.


இந்தச் சந்தர்ப்பத்தில் வாக்குமூலம் பெறும் இச்செயற்பாட்டை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீட்டில் தங்கியிருக்கும் தம்பதியினர் இருவரும் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »