Our Feeds


Saturday, May 2, 2026

Zameera

2009 சம்பவங்கள் காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை; முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்துகளின் விபரங்கள் வெளிப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி


 (இராஜதுரை ஹஷான்)


2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.


மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


2022 ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அன்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அவற்றை பெரிதுப்படுத்துகின்றன.


வங்குரோத்து நிலையடைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஒன்றுக்கூடி அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். ஜி.எல்.பீரிஸின் வீட்டின் ஒன்றிணைந்து பேசுகிறார்கள். அதன் பின்னர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். வேலையில்லாத காரணத்தால் ஏதாவது பேசட்டும், கலந்துரையாடட்டும்.இவர்களின் ஒன்றுக்கூடல்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் அது மக்கள் போராட்டமாக அமையாது. ஜனாதிபதி செயலகம் முன்பாக வாருங்கள் போராட்டத்தில் ஈடுபடுங்கள். அந்த போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாக அமைய ஒருபோதும் இடமளிக்க முடியாது.


கடந்த கால ஊழல்கள் குறித்து விரைவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். நிலக்கரி கொள்வனவு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வற்கு விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.


2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன்.


முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும். சட்டத்தின் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »