தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
எங்களுக்கிடையில் எந்தவொரு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்; அதுவே எமது வெற்றியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.நேற்று (12) செவ்வாய்க்கிழமை காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகாரிகள் இன ரீதியிலான முரண்பாடுகளை தவிர்த்து, இப்பிரதேச மக்கள் தங்களுடைய அதிகாரப் பொறுப்பிற்குட்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும். அதேபோன்று மக்களும் உரிய மற்றும் நியாயமான முறையில் அதிகாரிகளை அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதுவே பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வை பெற்றுத்தரும்.
அதிகாரிகளுடன் முரண்பட்டு எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று அரசியல் தலைமைகளும் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.அரசியல் பகுப்பாய்வு
மேலும், காரமுனை மக்கள் தமது பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். தாஹிர், ஜே.எம். முனாபீர், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் என்.எம். அனஸ், ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் தாஜுடீன், பள்ளிவாசல் தலைவர்கள், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
