Our Feeds


Thursday, May 21, 2026

Sri Lanka

சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - ராமதாஸ்!


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார். அதைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதியான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அரசியல் பகுப்பாய்வு

போராட்ட காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்கு சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தம்பி சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தமிழ்நாட்டில் தமிழ்ச் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயற்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்த துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, தம்பி சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »