Our Feeds


Thursday, May 21, 2026

Admin

சீனித் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!


இந்தியாவின் சீனி ஏற்றுமதித் தடை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் சீனி தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மே 15 முதல் செப்டெம்பர் 30 வரை இந்தியா சீனி ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ள நிலையில், பிரேசில், தாய்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


பிரேசிலிலிருந்து சீனி இறக்குமதி செய்ய கொள்முதல் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட தாமதங்கள் காரணமாக அவை நாட்டை வந்தடைய குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா சுத்திகரிக்கப்படாத சீனிக்கே தடை விதித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சுத்திகரிக்கப்பட்ட சீனியை இறக்குமதி செய்வது செலவை அதிகரிப்பதுடன், நுகர்வோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.


இதற்கிடையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக பால்மா, பருப்பு, பொதி செய்யப்பட்ட மீன், அரிசி வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.


ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தால், அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள இறக்குமதியாளர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது சுமார் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீனி கையிருப்பு உள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »