(எம்.மனோசித்ரா)
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, நிர்வாக அறிவு மற்றும் அரசியல் தெளிவற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை நாடு மீண்டும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வது சாத்தியமற்றது. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகக் கூறுவது ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகார முயற்சியாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ந்தால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல. கடந்த முறை நமக்கு உதவி செய்ய பல நாடுகள் இருந்தன. ஆனால், இம்முறை வீழ்ந்தால் மீண்டும் எழும் நம்பிக்கையை வைக்க முடியாது. எனவே, நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் வீழ்ச்சியடையப் போகும் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்டதைப் போன்று இலங்கையிலும் இரண்டு பலமான அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால் நம் நாட்டில் அவ்வப்போது இருந்த தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உடைத்து பலவீனப்படுத்தினார்கள். அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கிறது என்றார்.
