Our Feeds


Friday, May 22, 2026

Zameera

தொழிலாளர்களுக்கான காணி உரிமைக்கு நாம் எப்போதும் தடையாக இருக்கவில்லை - ஹேலீஸ் நிறுவனம்


 (எம்.மனோசித்ரா)


பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகள் இலவசமாக வழங்கியுள்ளன. அந்த வகையில் தொழிலாளர்களுக்கான காணி உரிமைக்கு நாம் எப்போதும் தடையாக இருக்கவில்லை. அதனை நாம் எதிர்ப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளருமான ரொஷான் இராஜதுறை தெரிவித்தார்.


சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சமூக அபிவிருத்தி நிறுவனகத்தினால் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது குறித்த நிகழ்வில் இடம்பெற்ற கேள்வி - பதில் அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டு திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,



1992இல் தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டபோது, தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளும் அவர்கள் பயிரிட்ட காய்கறி நிலங்களும் எங்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனையாக இருந்தது. எனவே, அதில் எங்களுக்கு எந்த அதிகாரமும், பொறுப்பும் இருக்கவில்லை. அது, அந்த நேரத்திலிருந்தே, நாம் அனைவரும் அறிந்தபடி, தோட்டத் துறையைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.அரசியல் பகுப்பாய்வு


ஆனால் இப்போது வரை, தோட்டத் துறையைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர் தான் அந்த தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளைக்கு தலைமை தாங்கி வருகிறார். அனைத்து நலன்புரி வீட்டுத் திட்ட நடவடிக்கைகளும் அதன் மூலமாகவே செயல்படுத்தப்பட்டன. எனவே, கோட்பாட்டளவில் இன்று, தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் மீது எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.


ஆரம்ப கால கட்டத்தில் தோட்டப் பகுதிகளில் வீடொன்றைக் கட்ட விரும்பினால், ஒரு நெறிமுறை, அனுமதி செயல்முறை மற்றும் சில சீரான தன்மைகள் இருந்தன. வீடுகள் நிர்வாகத்தின் அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாததன் விளைவாக, மலையகப் பகுதிகளுக்குச் சென்றால், அங்கு பல வகையான வீடுகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அவற்றின் நிலைமையைப் பற்றி எம்மிடம் கேட்பது பொறுத்தமற்றது என நான் நினைக்கின்றேன்.


ஏனெனில் வீடுகள் சார் பொறுப்புக்கள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. அது எங்கள் கடமையோ அல்லது எங்கள் பொறுப்போ அல்ல. எனவே, நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், மற்ற எல்லா தொழில்துறைகளையும் போல, இதுவும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


எனவே, ஒரு தொழில் வழங்குனர் என்ற முறையில், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வேலை நிலைமைகளை வழங்குவது, வேலைவாய்ப்பிற்கான வழிகளை வழங்குவது, வேலைவாய்ப்பு தொடர்பான அந்த நெறிமுறைகள் மற்றும் ஆதரவை வழங்குவதுதான் எங்களது கடமை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.


இது இவ்வாறிருக்க தற்போது நிலம் பற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. அது குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிராந்திய தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ், பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள 134 000 ஹெக்டயர் நிலப்பரப்பில் சுமார் 14 000 ஹெக்டயரில் வீடுகள் மற்றும் காய்கறித் தோட்டங்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இது பயிரிடப்பட்ட பயிர் நிலத்துடன் ஒப்பிடும்போது ஆறில் ஒரு பங்காகும்.


எனவே, நாம் பயிரிடும் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கும், மேலும் 15 சதவீதமும் வீடுகள் மற்றும் காய்கறித் தோட்டங்களாகவும் உள்ளன. எனவே, அதனை மக்கள் அரசாங்கத்திடம் கொண்டு செல்ல வேண்டும். பெருந்தோட்டப் பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களுக்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை.


தற்போதுள்ள 100,000 க்கும் குறைவான தொழிலாளர்களுக்காக இதுவரை 65,000 தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஒரு குடும்பத்திற்கு சுமார் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். லயன் குடியிருப்புகள் எங்களுக்குப் பாரம்பரியமாகக் கிடைத்தவை. தோட்ட நிறுவனங்கள் அவற்றைக் கட்டவில்லை. நாடு தோட்டங்களைத் தேசியமயமாக்கியதில் இருந்து, அவர்கள் எப்போதும் தனிவீடுகளை மட்டுமே கட்டினார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஆரம்பத்தில் அவை இரட்டைத் தனிவீடுகளாக (Twin Cottages) இருந்தன.


இப்போது அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானமெடுத்து, அவை ஒற்றை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. நாம் முன்னர் ஏழு பேர்ச் நிலயத்தையும், இப்போது பத்து பேர்ச் நிலத்தையும் முற்றிலும் இலவசமாகவும் 3.2 மில்லியன் மானியமாகவும் வழங்குகிறோம். இது வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு அவர்களின் மொத்த சம்பளத்தில் சுமார் எட்டு வருடச் சம்பளத்திற்குச் சமமாகும். அது அரசாங்கத்திடமிருந்து வருகிறதா அல்லது வேறு எங்கிருந்தாவது வருகிறதா என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு ஒரு நல்ல 550 சதுர அடி வீடு கிடைக்கிறது.



எனவே, வீடுகளை வழங்குவதற்கும் அப்பால், முதலாளிகள் வீட்டு வசதி வழங்க வேண்டும் என்ற எந்தக் கடப்பாடும், கட்டாயமும், நிபந்தனையும் இல்லை. அப்படியென்றால், அரசாங்கத் துறையோ அல்லது வேறு எந்தத் துறையோ வீட்டு வசதிகளை அவர்களது ஊழியர்களுக்கு வழங்குவதில்லையல்லவா? ஆனால் நிச்சயமாக, ஒரு மில்லியன் வலுவான வசிப்பிடத் தொழிலாளர் படைக்கு பொதுவான வசதிகளையும் கட்டமைப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம், அது கடமையினால் அல்ல. ஆனால், வழக்கமான நடைமுறையின் காரணமாக அவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.


வீடுகளை எல்லை நிர்ணயம் செய்வதை நாம் ஆதரித்திருக்கிறோம், ஊக்கப்படுத்தியிருக்கிறோம், எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கிறோம். நான' ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று 65,000 வீடுகள் மாத்திரமல்ல, விளையாட்டு மைதானங்கள், அனைத்துப் பொது வசதிகள் என, தோட்டங்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி, எந்தப் பிரச்சினையும் இன்றி நிலங்களை விருப்பத்துடன் வழங்கியுள்ளன. எனவே தோட்டப் புறங்களில் கிராமங்களை உருவாக்குவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும், பெருந்தோட்ட சமூகம் தங்களை ஏனைய சமூகங்களைப் போல கவனித்துக் கொள்வதற்கும் நாங்கள் முழுமையாக ஆதரவை வழங்குவோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »