2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு நாளை (மே 06) நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வு தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு : முற்பகல் 08:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இல் நடைபெறும். மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான வாய்மொழி மூலமான கருத்துக்கள் இதன்போது சேகரிக்கப்படும்.
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆவது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29(10) பிரிவின் கீழ் இந்தப் பொது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய அமைப்பு இயக்குனரால் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக இந்த விசேட மின்சாரக் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
