Our Feeds


Wednesday, May 6, 2026

Zameera

இலங்கை–மாலைதீவு வர்த்தக மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற 'இலங்கை – மாலைதீவு வர்த்தக மாநாடு 2026' நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மாலைதீவு குடியரசின் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மாநாடுகளின் வரிசையில் 10ஆவது மாநாடாக இது அமைந்தது. 

இரு நாடுகளையும் சேர்ந்த அரச பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைத்த இம்மாநாட்டில், பிரதான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை ரீதியான ஊக்குவிப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்கி நீண்டகால பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இம்மாநாட்டின்போது, இலங்கைக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, பொருளாதார ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் மூலோபாயக் கூட்டுறவு ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இங்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுவான கலாசார மரபுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இலங்கை - மாலைதீவு இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவு மற்றும் வலுவான இருதரப்பு உறவைச் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா, வர்த்தகம், மீன்பிடி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கிய பிரதமர், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு மாலைதீவு வர்த்தக சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்தார். 

இத்தகைய ஈடுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உற்பத்தித்திறன் மிக்க, பரஸ்பர நலன் பயக்கக்கூடிய, நீண்டகால நம்பகமான நட்புறவைப் பேண வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை - மாலைதீவு வர்த்தக மாநாடு 2026 ஆனது, இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்துவதுடன், நீண்டகால மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் கூட்டுறவை வளர்ப்பதற்கான பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

இம்மாநாட்டில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »